ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி விடுவித்து தீர்ப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி விடுவித்து தீர்ப்பு
புதுடெல்லி,

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.குற்றப்பத்திரிகை தாக்கல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்த தயாநிதி மாறன், தொழில் அதிபர் சிவசங்கரனிடம் இருந்த ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்ப்பந்தித்ததாகவும், அதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தது என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது

இது தொடர்பான வழக்கில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

வழக்கு பதிவு

சுமார் ஆயிரம் பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவன தலைவர் டி.அனந்தகிருஷ்ணன், நிர்வாக செயல் அதிகாரி ரால்ப் மார்ஷல் ஆகியோரின் பெயர் களும் மற்றும் சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், சவுத் ஏசியா என்டர்டெயின்ட் மெண்ட் ஹோல்டிங்(மொரீஷியஸ்), அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய 4 நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.

இந்த குற்றப்பத்திரிகையில் தொடர்புடையவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120பி (உள்நோக்குடன் குற்றம் புரிய சதி செய்தல்) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அமலாக்கப்பிரிவு வழக்கு

மேலும் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறையின் சார்பில் அதே தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கலாநிதி மாறனின் மனைவி காவேரி, தெற்கு ஆசியா எப்.எம்.நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கே.சண்முகம் ஆகியோரின் பெயர்களும் மற்றும் தெற்கு ஆசிய எப்.எம்.நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.

தனிக்கோர்ட்டில் மனு

இதற்கிடையே, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரும் மற்றவர்களும் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 2-ந் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கடந்த மாதம் 24-ந் தேதி நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார். அதாவது, இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து தனிக்கோர்ட்டு நேற்று முடிவு செய்வதாக இருந்தது.

அனைவரும் விடுவிப்பு

அதன்படி இந்த வழக்கில் நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தனது தீர்ப்பை வழங்கினார். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முகாந்திரமோ, உரிய ஆதாரங்களோ இல்லாததால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

மத்திய தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகளும் சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதில் அரசாங்க விதிமுறைகளை மீறியுள்ளதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான அலுவலக கோப்புகளில் உள்ள விஷயங்கள் தவறாக கையாளப்பட்டுள்ளதாகவும், சாட்சிகள் முன்னுக்குப் பின் முரணாக தங்கள் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

முகாந்திரம் இல்லை

இதன் அடிப்படையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், எனவே குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பரிவு தொடர்ந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஊகத்தின் அடிப்படையில் சிவசங்கரன் அளித்த புகாரை ஏற்று சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

February 2017
M T W T F S S
« Jan   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728