குலைந்தது குமரி

குலைந்தது குமரி

கன்னியாகுமரியில் சூறை காற்றுடன் கொட்டும் கனமழையால் மரங்கள், மி…

கன்னியாகுமரியில் சூறை காற்றுடன் கொட்டும் கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

Geplaatst door Polimer news op donderdag 30 november 2017

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, சூறைக்காற்றின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 900 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்துவிழுந்தன. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியது. குமரி மாவட்டத்தில் பல வழித்தடங்களிலும் போக்குவரத்து சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டது. தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் இரண்டு நாள்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதியானது தீவிரமடைந்து தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்தது. அது வியாழக்கிழமை காலை மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாகஉருவெடுத்துள்ளது. குமரியில் இருந்து60 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்த புயலுக்கு ஓக்கி (ockhi)என பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணி முதல், பலத்த சூறைக்காற்றுடன் குமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் துவங்கியது. இந்த மழைநண்பகல் இரண்டு மணி தாண்டியும் தொடர்ந்தது.

மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

பலத்த சத்தத்தோடு வீசிய சூறைக்காற்றால் வடசேரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி, ஈத்தாமொழி உள்ளிட்ட பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மின்கம்பங்கள், சாலையோரம், வீட்டுப் பகுதிகளில் நின்ற மரங்கள்வேரோடு சாய்ந்து விழுந்தன. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக வீசிய சூறைக்காற்றினால் வீட்டு மொட்டை மாடிகளில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகளின் பிளாஸ்டிக் மேல்மூடிகள் போன்றவையும் வெகு தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.

சூறைக்காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாமல் போனதால் பெரும்பாலான தனியார் தொலைத்தொடர்பு கோபுரங்கள் வேலை செய்யவில்லை. இதனால் இணையதளம், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகளும் முடங்கின. இதனால் ஒரே மாவட்டத்தில் இருந்தாலும்சொந்தங்களுக்குள் நலம் விசாரிக்க கூட முடியாமல் தவித்தனர். சூறைக்காற்றின் காரணமாக குலசேகரம், வேளிமலை, பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ரப்பர் மரங்களும், மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான வாழை மரங்களும் வேரோடு சாய்ந்தன.

நாகர்கோவில் நகரின் பிரதான பகுதிகளான வடசேரி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, ஸ்டேட் வங்கி சாலை, புத்தேரி சாலை என பெரும்பாலான இடங்களில் சாலையில் விழுந்து கிடந்த மரத்தினாலும், மின் கம்பங்களாலும் போக்குவரத்து தடைபட்டது, பலத்த மழையினால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் திறக்கப்படவில்லை. காலை நாளிதழ்கள், பால் உள்ளிட்டவற்றின் வினியோகமும் பெரும்பாலான இடங்களில் தடைபட்டது.

இதனால் பச்சிளம் குழந்தைகளு பால் கிடைக்காத நிலையும் ஏற்பட்டது. நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா, வடசேரி எஸ்.பி.ஐ வங்கி ஆகிய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கண்ணாட்டுவிளையில் ஆலமரம், தோட்டியோட்டில் அயினி மரம் என பெரிய மரங்களே மழைக்கும், சூறைக்காற்றுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் அடியோடு முறிந்துவிழுந்தன. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் குமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளிலும் இயக்கப்பட்ட பேருந்துகள் மீண்டும் பணிமனைக்கே திருப்பி விடப்பட்டன.

தடைபட்ட திருமணங்கள்

முகூர்த்த நாளான வியாழக்கிழமை குமரி மாவட்டத்தில் ஏராளமான திருமணங்கள் ஏற்பாடாகி இருந்தன. ஆனால்தொடர் மழையின் காரணமாக உறவினர்கள் வருகை தர இயலவில்லை. பாதி வழியில் மழையில் சிக்கிக் கொண்டனர். இதனால் கல்யாண விருந்துக்கு செய்து வைத்த உணவு வகைகள் வீணானது. ஒரு சில திருமணங்கள் வேறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சில திருமணங்கள் சுற்றங்கள் இருந்தும், மழையினால் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க நடந்த முடிந்தது.நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அண்ணா காலனியில் தாழ்வான பகுதியில் இருந்த 50 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இங்கிருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தஞ்சம் புகுந்தனர். கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் தனித்தனியே 5 வீடுகளும், தென்தாமரைக்குளத்தில் 3 வீடுகளும், அகஸ்தீஸ்வரத்தில் 2 வீடுகளும் மழையில் இடிந்து விழுந்தன.

நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வழியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது. நாகர்கோவில் பறக்கை வழித்தடத்தில் மட்டும் 4 கிலோ மீட்டருக்குள் 4 மரங்கள் முறிந்துவிழுந்தன. புதுக்கடை பகுதியில் கைசூண்டியில் மரம் முறிந்து விழுந்ததால் பல மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் பல மின்கம்பங்களும் சூறைக்காற்றால் கீழே சாய்ந்தன.பல இடங்களுக்கு சிற்றுந்துகள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. தொடர் மழை, சூறைக்காற்றுக்கு பயந்து பொதுமக்களும் வீட்டை விட்டுவெளியே வரவில்லை. நூற்றுக்கணக்கான லாரிகளும் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

குமரி மேற்கு மாவட்டத்தில் பிரதானமாக உள்ள ரப்பர் பால்வடிப்பு தொழில்மழை, சூறைக்காற்றால் முடங்கியது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேப்பமரம், தென்னை, வாழை மரங்களும் வேரோடு சாய்ந்தன. கோட்டாறு, வடசேரி சாலையில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் வேரோடுசாய்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது சபரி மலை சீசன்என்பதால் கன்னியாகுமரி, நாகர்கோவிலில் உள்ள கோவில்களுக்கு ஆன்மீகசுற்றுலா வந்த ஐயப்ப பக்தர்களும் மழையால் தவிப்புக்கு உள்ளாகினர். சுற்றுலாதலங்களும் வெறிச்சோடின. நாகர்கோவில், வடசேரி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து பெரும்பாலான பேருந்துகள் செல்லாததால் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

4 பேர் பலி

குமரி மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழை, சூறைக்காற்றுக்கு இதுவரை நான்கு பேர் பலியாகி உள்ளனர். இதில் கார்த்திகைவடலியை சேர்ந்த ராஜேந்திரன்(40), ஈத்தாமொழி குமரேசன்(55) ஆகியோர் வீட்டின் முன்பகுதியில் தென்னை மரம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மருதங்கோடு அருகேபரக்குன்று காமராஜர் தெருவைச்சேர்ந்த அலெக்ஸாண்டர்(55) அருகில் நின்றபனை மரம் வீட்டின் மீது விழுந்ததில்உயிரிழந்தார். இதே போல் மண்டைக்காடு பகுதியிலும் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரிசனங்கோப்பு உள்ளிட்ட பல பகுதிகள் தொடர்மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளன.

முன்னெச்சரிக்கை செய்யாத மாவட்ட நிர்வாகம்

உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை கிடைக்காத காரணத்தால் கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் குறித்த தகவலைஅறிய முடியாமல் உறவினர்கள்தவிக்கின்றனர். தேங்காய்பட்டணத்திலிருந்தும், மண்டைக்காடு அருகே புதூரிலிருந்தும்,சின்னபுத்தன் துறை, பூத்துறை ஆகிய இடங்களிலிருந்து மீன் பிடிக்கச்சென்ற 22 பேரில் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த 10 பேர் மட்டுமல்லாது கடலில்தங்கி மீன் பிடிக்க சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் குறித்த தகவல் இல்லை. படகுகளையும் மீனவர்களையும் தேடும் பணியில், கடலோர காவல்படையினர் ஈடுபட்ட போதிலும் கடல் சீற்றம்காரணமாக அப்பணி தடைபட்டுள்ளது. கடற்படை உதவியுடன் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் முன்னதாக எச்சரிக்கை விடுக்காததால் பல இடங்களில் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றபிறகே விடுதலை பற்றியதகவல் கிடைத்து மழையில் வீடு திரும்பினர்.

ரயில்கள் ரத்து

ஒக்கி புயல் மற்றும் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பிற இடங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக நாகர்கோவில் திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் காலையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்ல வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது. தொடர் மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலை சுமார் 2 மணி முதல் மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போதிய முன்னேற்பாடு நடவடிக்கைகளோ, மீட்பு குறித்த திட்டமிடுதலோ இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

December 2017
M T W T F S S
« Nov   Jan »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031